
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், "சாலை பணியாளர்களின் (41 மாதம்) பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்குப் பணி வழங்கவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி 6ஆம் தேதியான இன்று 5-வது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் விஜய மனோகரன் தலைமையில் திரண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகம் முன்பு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் கறுப்பு முகக் கவசம் அணிந்து போராடினர். அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுதலை செய்தனர். அரசு ஊழியர்களின் இப்போராட்டம் தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.