
ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் முன் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார். இந்த வாதத்திற்குப் பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையைச் செப்டம்பர் 8ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தரப்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இதில் தங்களையும் எதிர் மனுதாரராக சேரக்கக் கோரி தமிழக அரசு கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.