தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நாளை (01/11/2021) காலை 11.00 மணியளவில் 75- வது சுதந்திர தின விழா 'சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா' ஆண்டையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள 'விடுதலை போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இக்கண்காட்சியில் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் சிலைகள் இடம் பெறுகின்றன. மேலும், தேசத் தலைவர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில், தேசத் தலைவர்களின் வரலாற்றுத் தொகுப்புகளின் அரிய புகைப்படங்கள் மற்றும் அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. இப்புகைப்படக் கண்காட்சி 01/11/2021 முதல் 07/11/2021 வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினையும், தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நகரும் புகைப்பட கண்காட்சிப் பேருந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு, தேசப்பற்றினையும், வரலாற்றினையும் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.