டாஸ்மாக் மூடல்; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

 Tamil Nadu Government Appeals to Supreme Court for TASMAC

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே- 7 ஆம் தேதி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மே- 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 44 நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்கள் கடை முன் குவிந்தனர். இதனால் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 294.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே டாஸ்மாக் கடைகளைத் திறந்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு நேற்று (08/05/2020) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனிமனித இடைவெளி உள்ளிட்ட உத்தரவுகளைப் பின்பற்றாததால் ஊரடங்கு முடியும் வரை (மே- 17ஆம் தேதி) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும் மே- 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானம் விற்கவேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும்மூடுமாறு டாஸ்மாக் நிறுவனம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், "டாஸ்மாக்கைத் திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டாஸ்மாக் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus lockdown TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe