Tamil Nadu fishermen released from Sri Lankan jail

புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி (09.10.2024) உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisment

அதன் பின்னர் மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதோடு மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இலங்கை சிறையில் இருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 1 மீனவர் என மொத்தம் 5 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து 5 பேரும், விமானம் மூலம் இன்று (22.11.2024) சென்னை வந்தடைந்தனர். அப்போது அவர்களைத் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். அதன் பின்னர் மீனவர்கள் அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கை சிறையில் இருந்து 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் சற்று ஆறுதலை அளித்துள்ளது.