Skip to main content

ஜார்க்கண்டில் மர்மமான முறையில் தமிழக மருத்துவர் மரணம்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Tamil Nadu doctor lost his life mysteriously in Jharkhand

 

நாமக்கல் மாவட்டம் வேல்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். கட்டட தொழிலாளியான இவரது மகன் மதன்குமார் (28). எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்த மருத்துவரான மதன்குமார், மேல்படிப்புக்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று படித்து வந்த மதன்குமார் திடீரென்று மாயமானார். அவருடன் படித்த சக மாணவர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். 

 

இந்த நிலையில், நேற்று (02-11-23) விடுதியின் பின்புறத்தில் மதன்குமார் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். மதன்குமாரின் உடல் பாதி வரை எரிந்த நிலையில் இருந்ததைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், சடலமாக இருந்த மதன்குமாரை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து மதன்குமாரை சில மர்ம நபர்கள் கொலை செய்து தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு, பாதி வரை எரிந்த அவரின் உடலை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் சோதனை செய்த காவல்துறையினர் சில தடயங்களையும் கைப்பற்றினர். 

 

இதனையடுத்து, கொலை நடந்த விடுதியைச் சோதனை செய்த காவல்துறையினர், அங்கிருந்த செல்போன் ஒன்றைக் கைப்பற்றி பரிசோதித்து வருகின்றனர். மேலும், அவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மதன்குமாரின் இறப்பு குறித்த காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்படிப்புக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜார்க்கண்டில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹேமந்த் சோரன் ஏன் கைது செய்யப்பட்டார்?; மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 19.04.2024 தொடங்கிய தேர்தலானது வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி சார்பாக, பீகார், பெங்களூர், மும்பை, டெல்லி என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள், தொகுதி பங்கீட்டில் சில கருத்து மோதல்கள் இருந்தாலும், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சுரங்க முறைகேட்டின் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்தியா கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதே போல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சிகள், பா.ஜ.க மீது குற்றச்சாட்டு வைத்தும், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று (21-04-24) இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலை குனிவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினரை அவமதித்துவிட்டார். பழங்குடியினரை தொடர்ந்து பயமுறுத்தினால் பா.ஜ.க அழிந்துவிடும். பழங்குடியினரை தீண்டத்தகாதவர்களாக பா.ஜ.க கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 180 இடங்களையே வெற்றி பெறும்” என்று கூறினார்.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.