Tamil Nadu Day Celebration; Competition announcement for school students

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

அதன்படி தமிழ்நாடு நாள் விழா முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படும். அதோடு முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவார்கள். சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட உள்ளது.

Advertisment

அதன் ஒரு பகுதியாகச் சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 09.07.2024 அன்று சென்னை அண்ணாசாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் ரூபாயும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்படுவார்கள் எனத் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு : ஆட்சிமொழி தமிழ், பேச்சு போட்டிக்கான தலைப்பு : 1. குமரி தந்தை மார்சல் நேசமணி, 2. தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா, 3. முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகும்.