கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல தமிழகத்திலும் புற்றுநோய் உள்ளிட்ட டயாலிசிஸ் சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/401_17.jpg)
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் புற்றுநோய் மருத்துவச் சிகிச்சை பாதிக்கப்படாமல் உரிய வசதிகளைச் செய்துதரவேண்டும் எனப் புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தா சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தியதாகச் செய்தி வெளிவந்தது. இது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. கரோனாவுக்கு எப்படி முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவேண்டுமோ, அதுபோல புற்றுநோயாளிகளுக்கும் முன்கூட்டியே சிகிச்சை அளிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களைக் காப்பாற்ற முடியும்.
டயாலிசிஸ், கீமோதெராபிக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என சமீபத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால் நடைமுறையில் 102 ஆம்புலன்ஸ் பயன்படுத்துகிற வாய்ப்பை நோயாளிகளால் பெற முடியவில்லை. மக்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது டயாலிசிஸ் செய்துகொள்ள போக்குவரத்து வசதி இல்லாமல் பல நோயாளிகள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்த ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. எந்த வித வாகன வசதியும் இல்லாமல் நோயாளிகள் டயாலிசிஸ் செய்ய முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கர்நாடக, ஆந்திர அரசுகள் ஓலா என்கிற வாடகை வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தோடு இத்தகைய அவசரச் சிகிச்சை பெறுபவர்களுக்குப் போக்குவரத்துச் சேவை செய்துகொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அந்தச்சேவையை அந்த மாநில மக்கள் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல தமிழகத்திலும் புற்றுநோய் உள்ளிட்ட டயாலிசிஸ் சிகிச்சை பெறவேண்டிய நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும். இதற்கு ஓலா, ஊபர் போன்ற தனியார் வாடகை வாகன வசதிகளைப் பயன்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்த கோரிக்கையிலுள்ள தீவிரத்தன்மையை மனிதாபிமான உணர்வோடு புரிந்துகொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)