/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a812_3.jpg)
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.
எனவே 2021 ஆம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்தவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்களான வேல்முருகன், செல்வப்பெருந்தகை, ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனே மத்திய அரசு தொடங்க வேண்டும். சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் நகலை கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.
1931-ல் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகு சமகாலத் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு இதனை நிறைவேற்றுவார் என்று எதிர்நோக்குகிறேன். வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் குறிப்பாக விளிம்பு நிலை மக்களை சென்றடைய வேண்டும். பின்தங்கிய மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியைஇலக்காகக் கொண்டு கொள்கை வகுக்க சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையாக இருக்கும். சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வரலாற்று ரீதியாக நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக சாதி இருந்து வருகிறது. சாதி அடிப்படையிலான சமூகபொருளாதார கணக்கெடுப்பு தரவுகள் பொதுவெளியில் கிடைக்கச் செய்வது அவசியம்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)