
உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/04/2022) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த விவசாயி கணேசனின் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.