Tamil Nadu Chief Minister M.K.Stalin says Nobody can stain Valluvar

Advertisment

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டிதமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழினத்தில் பிறந்து அமிழ் தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

குறள் நெறி நம் வழி!

குறள் வழியே நம் நெறி!” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

இதற்கு முன்பு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவர் காவி உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.