Tamil Nadu Chief Minister MK Stalin's letter to the Union Foreign Minister!

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15/04/2022) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (15/04/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அக்கடிதத்தில், கடந்த மார்ச் மாதம் 31- ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி அன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின் போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழகத்திற்கு வந்துக் கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கை குறித்துப் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவுத் தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழக அரசு உறுதியோட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதோடு, இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியைச் செய்து தருமாறும், முதலமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்து, கடந்த மார்ச் 23- ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் துயர நிலை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டும், மீனவர்களால் அவ்வளவு பெரிய பிணைத் தொகையை செலுத்த இயலாத காரணத்தினால, வரும் மே மாதம் 12- ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவ்விஷயத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலைச் செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ உதவிகளை உறுதி செய்திடுமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.