Tamil Nadu Chief Minister M.K. Stalin letter

Advertisment

மணிப்பூரில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதல்வருக்கு தமிழகமுதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (31.7.2023) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூரில் பழங்குடியின மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், அது கலவரமாக மாறியது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. தமிழர்கள் மற்றும் அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்., பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசியப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாக எனது கவனத்திற்கு வந்துள்ளது.

Advertisment

இந்த இக்கட்டான நேரத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள்,படுக்கை விரிப்புகள்,கொசுவலைகள்,அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்” எனக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.