
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க உள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி ராஜ்பவனுக்கு வருகை தந்து சந்திப்பு மேற்கொண்டுள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை திமுக அரசு புறக்கணித்திருந்தது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அரசு தெரிவித்திருந்தது.
தற்பொழுது 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் தர கோரிக்கை வைக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக துணை வேந்தரை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து தமிழக முதல்வருக்கு கைமாற்றப்பட வேண்டும் என்ற மசோதா நிலுவையிலுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதல்வருடன், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆளுநருடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர்.