Tamil Nadu Chief Minister inaugurates 'Vanavil Mandram' for school students

தமிழகம் முழுவதும் உள்ள 13 ஆயிரத்து 200 அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில்பயிலும் மாணவ மாணவிகள் மொத்தம் 20 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை செயல்முறை விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ‘வானவில் மன்றம்’ என்ற புதிய திட்டம் இன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisment

திருச்சி மாவட்டம், காட்டூர், பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வானவில் மன்றம் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான கல்வி அறிவை செயல்முறை விளக்கங்கள் மூலம் கற்றுக் கொடுப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு என முதல் கட்டமாக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட செயல்முறை விளக்க அறிவியலை தமிழக முதல்வர் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி. திருநாவுக்கரசர், எம்.பி. திருச்சி சிவா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இருதயராஜ் உட்பட அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.