
தமிழக சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (14.03.2025) தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான தமிழக அரசு தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். எனவே, மக்களை கவரும் பல்வேறு அம்சங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு, உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை உயர்வு, மகளிர் விடியல் பயண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பான காட்சிகளை 936 இடங்களில் நேரலை செய்யப்படவுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் மட்டும் 100 இடங்களில் நேரலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பேரவைக் கூட்டத்தொடரின் நாட்களை இறுதி செய்வதற்கான அலுவலாய்வு கூட்டமும் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.