Skip to main content

மார்ச் 18- ல் தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்!

Published on 08/03/2022 | Edited on 08/03/2022

 

Tamil Nadu budget to be tabled on March 18!

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (08/03/2022) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, "2022- 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 18- ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 2022- 2023- ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் மார்ச் 19- ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18- ஆம் தேதி அன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்றார். 

 

தமிழக நிதியமைச்சராகப் பொறுப்பேற்று முதல்முறையாக முழு பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
DMK MPs walk out to condemn the central government

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.

அதே சமயம் இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு முக்கிய காரணங்களுக்காக மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி பிப்ரவரி 10 ஆம் தேதி, சனிக்கிழமையான இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் மக்களவையில், தமிழக மீனவர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியதுடன், தமிழக மீனவர்கள் கைது சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என தி.மு.க. எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் அளிக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலங்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று இரு அவைகளிலும் இருந்து தி.மு.க உறுப்பினரகள் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.