
ஈரோடு மண்டல திமுக மாநாடு இன்று காலை 10 மணிக்கு பெருந்துறையில் தொடங்கியது. மாநாட்டுக்கொடியை சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் ஏற்றினார்.
தொடர்ந்து நடந்த மாநாட்டின் தலைவரான துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திராவிட இயக்க வரலாறுகளைப் பற்றி பேசினார். அடுத்து மாநிலங்களவை எம்பியான திருச்சி சிவா பேசும்போது,
இன்று தமிழ்நாடு கழக செயல்தலைவரான தளபதியை நம்பியுள்ளது. வடநாட்டிலும், இந்தியா முழுக்க அரசியல் தலைவர்கள் ஸ்டாலின் பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கின்றனர். இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொள்கை ரீதியாக ஏற்பட்டுள்ளது. ஆளும் எடப்பாடி அரசு, பாஜகவின் பினாமி அரசாக செயல்படுகிறது. ரத யாத்திரை தமிழ்நாட்டிலேயே நடத்தும் அளவுக்கு வந்து விட்டனர்.
இதை துணிச்சலோடு தட்டிக்கேட்டது கழகம்தான். சட்டமன்றத்தில் செயல் தலைவர் ஸ்டாலின், ரத யாத்திரையை தமிழகத்தில் விட மாட்டோம் என எதிர்ப்பு குரல் கொடுத்தபோது, கேரளா, கர்நாடகாவில் எதிர்ப்பு இல்லை; நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு செயல்தலைவர் மிகத் தெளிவான பதிலைச் சொன்னார். தமிழ்நாடு பெரியார் மண். ஆகவே, இங்கு மதவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சாலையில் இறங்கி போராடினார்.
இன்றைய சூழலில் தளபதியின் இரு கண்களாக தமிழக மக்களும், திமு கழகமும் உள்ளது. ஆகவே, இரண்டையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தளபதி ஸ்டாலினுக்கு உண்டு. இரண்டு கண்களிலும் நீர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உணர்வுப்பூர்வமாக பேசினார்.
தொடர்ந்து மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாளர்கள் பேசி வருகின்றனர். இரவு முதன்மைச் செயலாளரான துரைமுருகன் நிறைவாக பேசுகிறார். மீண்டும் நாளை காலை 9 மணிக்கு மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.