
நடிகர் அஜித் குமாருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து விருது வழங்கும் விழா கடந்த 28ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடந்தது. அதில் பங்கேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் சென்னை திரும்பினார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் குவிந்தனர். அச்சமயத்தில் ஒருவர் அஜித்திற்குப் பொன்னாடை அணிவிக்க முயன்றார். அவருக்கு வணக்கம், நன்றி என்று கூறிய அஜித் பொன்னாடையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் செய்தியாளர்களிடமும் 'நன்றி... நாம் நேரில் சந்திப்போம்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
மேலும் அவரை கண்டதும் பலரும் அவருடன் போட்டோ எடுக்க முற்பட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அஜித் எல்லோருக்கும் நன்றி எனச் சொன்னார். மேலும் விரைவில் சந்திப்பதாகவும் கூறினார். அதேசமயம் அஜித் குமார் பிறந்தநாள் இன்று (01.05.2025) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு வீரம், பில்லா, வாலி போன்ற படங்கள் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு குட் பேட் அக்லி திரைப்படமும் இன்னும் பல அரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. பட வெற்றி, ரேஸ், பத்மபூஷன், பிறந்தநாள் என அஜித்தை விட அஜித் ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு - திருமங்கலம் பகுதியில் நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதில் 'தமிழ்நாடு அஜித்குமார் கழகம்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் அதில் 'அரசியல் சார்பற்றது' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சாயலில் தமிழ்நாடு அஜித்குமார் கழகம் என்று போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.