Skip to main content

நம் தரத்தை உயர்த்தும் மொழி தமிழ்!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

 

முதுபெரும் தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வனாருக்கு திருவாரூரில் பாராட்டு விழா நடந்தது. அவரது  50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்ப் பணியையும், படைப்புப் பணியையும்  பாராட்டும் விதமாக, அவருடைய   முன்னாள் மாணவர்களும் காமராஜர்  கல்வி அறக்கட்டளையினரும்  இணைந்து  இவ்விழாவை நடத்தினர்.

 

Thiruvarur



வேலுடையார் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி தலைமையில் நடந்த இந்த விழாவில், தமிழறிஞர் ஞானச்செல்வனாரைப்  பாராட்டியப் பேசிய முன்னாள் அரசவைக் கவிஞரும் பாடலாசிரியருமான முத்துலிங்கம் ”தமிழுக்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கிறார் ஞானச்செல்வன்.  தமிழகத்தின் மூத்த தமிழறிஞரான அவர், தமிழாசிரியர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தவர். தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்களுக்கும் செய்தி அறிவிப்பாளர்களுக்கும், தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்கச் சொல்லிக்கொடுத்தவர். இப்போதும் கூட தமிழைப் பிழையிலாமல் பேசவும் எழுதவும்  பலருக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் .இப்படிப்பட்ட தமிழறிஞர்களால்தான் தமிழன்னை இன்னும் இளமை நலம் குன்றாமல், தன் கட்டுக்கோப்பும்  மரபுத் தன்மையும் மாறாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறாள்.
 

உலகின் தொன்மையான மொழிகளில் தலையாய மொழியாக நம் தமிழ்மொழி திகழ்கிறது. உலகில் இருக்கும் ஆறாயிரம் மொழிகளில், தொன்மைச் சிறப்போடு, தனித்து இயங்கும் வல்லமையோடு தமிழ்மொழி விளங்குகிறது. உலக மொழிகளுக்கெல்லாம் மூலமொழியாகத் திகழ்வது தமிழ்மொழிதான் என்று இன்று உலகளாவிய ஆய்வாளர்கள் அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  


 

அப்படிப்பட்ட   தமிழுக்கு இன்று நம் தமிழ்நாட்டிலேயே பலவகையிலும்  ஆபத்துகள் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடப் புத்தகங்களிலேயே, தமிழின் தொன்மைச் சிறப்பைக் குறைத்துக்காட்டும் அளவிற்கு நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய இழிவிலிருந்து தமிழைக் காப்பாற்ற, ஞானச்செல்வனாரைப்  போன்ற அறிஞர்களின் தொண்டு  நமக்குத் துணையாக இருக்கிறது. எனவே தமிழுக்குத் தொண்டாற்றும் ஞானச்செல்வனாரைத் தமிழுலகம் கொண்டாடவேண்டும்.  தமிழக அரசு  அவருக்கு விருதுகளைக் கொடுத்துப் பாராட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


 

ஏற்புரையாற்றிய ஞானச்செல்வனார் ”நம் தமிழ்மொழி ஒழுக்கம் கலந்தமொழி. அதைக் கற்க மறந்ததால் இப்போதைய பிள்ளைகளிடம் ஒழுக்கம் குறைந்துவருகிறது. இங்கே பிறமொழியைப் படிப்பவர்களும் தமிழைக் கற்கவேண்டும். ஏனென்றால் அது படிப்பவர்களின் மனத்தையும் தரத்தையும் உயர்த்தும் தன்மைகொண்டது. நாம் துறைதோறும் தமிழை வளர்க்கப் பாடுபடவேண்டும். நமக்கிடையே எத்தகைய வேற்றுமைகள்  இருந்தாலும், நாம்  உணர்வோடு ஒன்றுபட்டுத் தமிழை வளர்க்கவேண்டும். தமிழ் நம் ஆடையல்ல; அடையாளம்” என்றார்.
 

விழாவில் நகைச்சுவை நாவலர் இரெ.சண்முகவடிவேல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஞானச்செல்வனாரை வாழ்த்திப் பாராட்டினர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.