Tamil fishermen should find a permanent solution says Anbumani

தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணபதற்கான திட்டத்தை இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் வகுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

மீனவர்கள் நலனுக்கான இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29-ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை.

Advertisment

தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையின் அத்துமீறல்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஜூன் 16-ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் 404 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 54படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் தவிர இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள் நேற்று சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். சென்னை உயர்நீதிமன்றமும் இதே யோசனையை பல முறை தெரிவித்திருந்தது. கடைசியாக 2022-ஆம் ஆண்டில் இந்தியா - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப்பின் இந்தக் கூட்டம் நடைபெறுவது மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

Advertisment

இந்திய , இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் கூடிக் கலையும் கூட்டமாக அமைந்து விடக் கூடாது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியதாக உள்ள நிலையில், அந்த எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இரு தரப்பு மீனவர்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி? என்பதை 29-ஆம் தேதி நடைபெறவுள்ளக் கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும்.

மீனவர் சிக்கலுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட, இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகுமுறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.