Skip to main content

பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

tamil film director kv anand passed away in hospital

 

பிரபல தமிழ்ப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார். 

 

இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

ஒளிப்பதிவாளர் முதல் இயக்குநர் வரை....

மோகன்லால் நடித்த ‘தென்மாவின் கொம்பத்’ மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளரானார் கே.வி.ஆனந்த். அதைத் தொடர்ந்து, தமிழில் முதல் முறையாக ‘காதல் தேசம்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக, ‘நேருக்கு நேர்’, ‘முதல்வன்’, ‘விரும்புகிறேன்’, ‘பாய்ஸ்’, ‘செல்லமே’, ரஜினியின் ‘சிவாஜி’ படத்திற்கும் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் பணியாற்றியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.வி.ஆனந்த், 'கனா கண்டேன்' மூலம் இயக்குநரானார். ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘காப்பான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘மீரா’, ‘சிவாஜி’, ‘மாற்றான்’, ‘கவண்’ ஆகிய படங்களில் நடிகராகவும் சில காட்சிகளில் கே.வி.ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.