canada university tamil seat dmk party fund announced

Advertisment

திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (26/04/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்னைத் தமிழ்மொழிக்கு உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ‘தமிழ் இருக்கை’அமைக்கப்பட்டு, ஆங்காங்கு வாழும் தமிழர்கள் மொழித் தொண்டாற்றி வருகிறார்கள். இந்த சீரிய முயற்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நிதியுதவி அளித்து, தமிழ்மொழியின் புகழும்பெருமையும் உலகெங்கும் பரவிடத் தொய்வின்றி பணியாற்றி வருகிறது.

கனடா நாட்டில் உள்ள ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இருக்கை’ உருவாக வேண்டுமென்ற ஆர்வத்தோடு கனடா வாழ் தமிழர்களும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் முயற்சி செய்து வருவதாகவும், அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியுதவி தந்திட வேண்டுமென்றும் கனடியத் தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, எத்திக்கிலும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் மொழிச் சிறப்பிற்கும் என்றென்றும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கனடா ரொறொன்ரோப் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’க்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. செம்மொழித் தமிழின் சிறப்பு எங்கெங்கும் பரவட்டும், இளைஞர்களின் தாய்மொழித் தாகத்தைத் தீர்க்கட்டும்!" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.