Skip to main content

90 தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள்

Published on 06/04/2018 | Edited on 06/04/2018


 

tamil 600.jpg


2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் மற்றும் தமிழ்ச் செம்மல் விருதுகள் என மொத்தம் 90 விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


2017-ம் ஆண்டுக்கான ‘கபிலர் விருது’ கல்வெட்டு ஆய்வாளர் கு.வெ.பாலசுப்பிரமணியன், அகழாய்வுத் துறை ஆய்வாளர் ச.கிருஷ்ணமூர்த்திக்கு ‘உ.வே.சா. விருது’, தமிழறிஞர் சுகி.சிவத்துக்கு ‘கம்பர் விருது’, வைகைச்செல்வனுக்கு ‘சொல்லின் செல்வர் விருது’, சிறந்த மொழி பெயர்ப்பாளர் கோ.ராஜேஸ்வரி கோதண்டத்துக்கு ‘ஜி.யு.போப் விருது’, ஹாஜி எம்.முகம்மது யூசுப்புக்கு உமறுப்புலவர் விருது, வெ.நல்லதம்பிக்கு ‘இளங்கோவடிகள் விருது’, சிங்கப்பூர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமிக்கு ‘அம்மா இலக்கிய விருது’ ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவையும் வழங்கப்பட்டன.


‘சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது’கள் நெல்லை சு.முத்து, தி.வ.தெய்வசிகாமணி, ஆ.செல்வராசு என்கிற குறிஞ்சிவேலன், ஆனைவாரி ஆனந்தன், சச்சிதானந்தம், வசந்தா சியாமளம், இரா.கு.ஆல்துரை, பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன், ஆண்டாள் பிரியதர்சினி, தர்லோசன்சிங் பேடி, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான ‘இலக்கிய விருது’ ஆஸ்திரேலியாவை சேர்ந்த சந்திரிகா சுப்ரமணியன், ‘இலக்கண விருது’ ஜெர்மனியை சேர்ந்த உல்ரிகே நிகோலஸ், ‘மொழியியல் விருது’ ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. தமிழ்த்தாய் விருதுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதுத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை அச்சங்கத்தின் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
 

2016-ம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான ‘இலக்கிய விருது’ சிங்கப்பூர் நா.ஆண்டியப்பன், ‘இலக்கண விருது’ பிரான்சின் பெஞ்சமின் லெபோ, மொழியியல் விருது ஜெர்மனி சுபாஷினி, ‘முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது’ அல்டிமேட் மென்பொருள் தீர்வக நிறுவனர் இரா.துரைபாண்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டன. அத்துடன் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் இதர பரிசுகளும் வழங்கப்பட்டன. 2016, 2017-ம் ஆண்டுகளுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள், தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்