Advertisment

தமிழக நீரை கொள்ளையடிக்கும் கேரளா: வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: அன்புமணி கண்டனம்

கேரள அரசு கடந்த 6 நாட்களாக சிறுவாணி நீரை கொள்ளையடித்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பொறுப்பான செயல் அல்ல என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையிலிருந்து கேரள அரசு ஒப்பந்தத்திற்கு விரோதமாக தண்ணீர் எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன. தமிழகத்தை பழிவாங்கும் நோக்குடனான கேரளத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

Advertisment

கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள சிறுவாணி ஆற்றிலிருந்து கோவை மாநகருக்கு குடிநீர் எடுத்து வரப்படுகிறது. மொத்தம் 49.50 அடி உயரமுள்ள அணையிலிருந்து கோவையின் குடிநீர் தேவைக்கு ஏற்ப தினமும் 5 கோடி முதல் 7 கோடி லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணை என்பது கோவைக்கான குடிநீர் ஆதாரம் என்பதால், அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி சிறுவாணி அணையிலிருந்து அப்பகுதியிலுள்ள தாவரங்கள் மற்றும் வன விலங்குகளின் தேவைக்காக வினாடிக்கு 5 கன அடி வீதம் மட்டுமே கேரளம் தண்ணீர் எடுக்க முடியும். அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டால் அது பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் சேரும்.

ஆனால், கடந்த 6 நாட்களாக தேவையே இல்லாமல் சிறுவாணி அணையிலிருந்து கேரளம் அளவுக்கு அதிகமாக தண்ணீரை எடுக்கத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீரை எடுக்கத் தொடங்கிய கேரளம் ஒரு கட்டத்தில் வினாடிக்கு 90 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட்டது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட 18 மடங்கு அதிகமாகும். வழக்கமாக இந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் அது பில்லூர் அணைக்கு வந்து சேரும். ஆனால், இப்போது அட்டப்பாடி பகுதியில் கேரளம் 3 தடுப்பணைகளை கட்டி வைத்திருப்பதால் அந்த நீர் தமிழகத்திற்கு வருவதில்லை. இதே அளவில் இன்னும் சில நாட்களுக்கு கேரளம் தண்ணீரை திறந்தால் சிறுவாணி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து கோடைக்காலத்தில் கோவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.

சிறுவாணி அணையிலிருந்து கேரளம் அதிகமாக நீர் எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை; யாருக்கும் பயனும் இல்லை. சிறுவாணி அணையிலிருந்து திறக்கப்பட்டு அட்டப்பாடி தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் பாசனம் செய்ய கேரளம் திட்டமிட்டிருந்தாலும், இப்போது அங்கு விவசாயம் நடைபெறவில்லை என்பதால் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. கேரளம் இவ்வாறு செய்வதற்கு காரணம் தமிழகத்தை பழி வாங்க வேண்டும் என்பது தான். கேரள அரசின் இப்பழி வாங்கல் நோக்கம் கூட நியாயமற்றது; வஞ்சக எண்ணம் கொண்டதாகும். பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தப்படி கேரளத்திற்கு தமிழகம் தண்ணீர் வழங்கவில்லை என்று கூறி கேரளத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை திருப்திப்படுத்தவே சிறுவாணி அணையிலிருந்து அதிக தண்ணீரை எடுத்து கேரளம் வீணடிக்கிறது.

பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தப்படி தமிழகம் தண்ணீர் வழங்கவில்லை என்ற கேரளத்தின் புகார் அடிப்படை ஆதாரமற்றதாகும். 1973-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டு, அதற்கு 15 ஆண்டுகள் முன்பாக 1958-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பரம்பிக்குளம் - ஆழியாறு ஒப்பந்தப்படி கேரளத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சோலையாறு அணையிலிருந்து 12.30 டி.எம்.சி, ஆழியாறு அணையிலிருந்து 7.25 டி.எம்.சி என மொத்தம் 19.55 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். இதில் முறையே 10.50 டி.எம்.சி, 5 டி.எம்.சி என மொத்தம் 15.50 டி.எம்.சி நீர் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 4.05 டி.எம்.சியை அடுத்த 4 மாதங்களில் வழங்கினால் போதுமானது. இதை கேரளமும் ஒப்புக் கொள்கிறது.

ஆனால், பாலக்காடு மாவட்டத்திலுள்ள பயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஆழியாறு அணையிலிருந்து வழங்கப்பட வேண்டிய 2.25 டி.எம்.சி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தான் கேரள விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆழியாறு அணையில் போதிய நீர் இல்லாத நிலையில், கேரளத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமற்றது. இதைக்கூட உணராமல் கேரள விவசாயிகளின் போராட்டத்தை அம்மாநில அரசு ஊக்குவிப்பதும், அவர்களை திருப்திப்படுத்த சிறுவாணி அணையிலிருந்து அதிக நீரை திறந்து வீணடிப்பதும் நியாயமான நடவடிக்கையல்ல. இது இரு மாநில மக்கள், விவசாயிகளிடையே தேவையற்ற கசப்புணர்வை ஏற்படுத்தி விடும். இதை உணர்ந்து சிறுவாணி அணையிலிருந்து அதிக தண்ணீரை எடுப்பதை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

கேரள அரசு கடந்த 6 நாட்களாக சிறுவாணி நீரை கொள்ளையடித்து வரும் நிலையில் அதை தடுத்து நிறுத்த தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பொறுப்பான செயல் அல்ல. உடனடியாக கேரள அரசையும், மத்திய அரசையும் தொடர்பு கொண்டு சிறுவாணி ஆற்றிலிருந்து அதிக நீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கோவை மாநகருக்கு கோடைக் காலத்திலும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe