/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1Veeramani-Raw.jpg)
மருத்துவ மேற்படிப்பு (P.G என்ற) படிக்க முன்வருவோர், அந்த மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராக இருந்தால்தான் வாய்ப்பு கிட்டும்; மனு போடும் தகுதியே அதனடிப்படையில் தான் என்று மகாராஷ்டிர அரசு ஆணை வற்புறுத்துகின்றது. அதையே தமிழ்நாடு அரசு பின்பற்றினால், குறைந்தபட்சம் நமது மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்த நமது மாணவ, மாணவிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
சமூக அநீதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக!
நீட் தேர்வு என்பது ஆக்டோபஸ் என்ற எட்டுக்கால் பிராணியின் கால்கள்போல் விரிந்து, பரந்து பல துறைகளையும் அடைத்துக் கொள்ளும் சமூக அநீதி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நிகழ்ந்து வருகின்றது - மத்திய அரசின் சுகாதாரத் துறையில்!
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி போட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, உச்சநீதிமன்றம் அவசரக் கோலத்தை அள்ளித் தெளித்தது போன்ற ஒரு தீர்ப்பை மாநிலங்கள்மீது திணிக்கும் நிர்ப்பந்த சூழ்நிலையால், கிராமப்புற மாணவர்கள், ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்கள் நிலை பரிதாபமாக பல அனிதாக்களை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் பொதுநலவாதிகளுக்கு உண்டாகியிருக்கிறது!
சட்டமன்ற அவமதிப்பின் ஒரு அம்சம்
தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் (நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் அரசியலமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமையை வலியுறுத்திட) ஓராண்டுக்குமேல், மத்திய அரசில் எவ்வித பதிலும் தராத நிலையில், கிடப்பில் போடப்பட்டு இருப்பது சட்டமன்ற அவமதிப்பின் ஒரு அம்சம் என்றே கூறவேண்டும்.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ்.-க்கு ஆரம்பித்து, மேற்பட்டப் படிப்பிலும் அதன் மூக்கு நுழைக்கப்படும் நிலையில், மகராஷ்டிர மாநில அரசு போட்டுள்ள ஒரு ஆணை மிக முக்கியமானதாகும்.
மகாராஷ்டிர அரசின் அரசாணை!
மருத்துவ மேற்பட்டப் படிப்பு ( P.G . என்ற) படிக்க முன்வருவோர், அந்த மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராக இருந்தால்தான் வாய்ப்பு கிட்டும்; மனு போடும் தகுதியே அதனடிப்படையில் தான் என்று அந்த அரசு ஆணை வற்புறுத்துகின்றது. அவ்வாணையை அப்படியே தந்துள்ளோம். (மகாராஷ்டிர அரசு ஆணை அருகே காண்க).
இதன்படி மேற்பட்ட படிப்புக்கு மனு போடுவோர், மகாராஷ்டிர மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்தவராகவே இருக்கவேண்டும் (இது 22.2.2018 இல் போடப்பட்டுள்ள ஆணையாகும்).
இதை நமது தமிழ்நாடு அரசு அப்படியே தமிழ்நாடு அரசுக்குரிய ஆணையாகப் போடலாம்; உடனடியாக தாமதிக்காமல் போடவேண்டும்!
நமது மாணவ, மாணவிகள் பலனடைய வாய்ப்பு
அதே வழிகாட்டும் முறைகளை தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசு, சுகாதாரத் துறை பின்பற்றினால், குறைந்தபட்சம் நமது மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படித்த நமது மாணவ, மாணவிகள் பலனடைய வாய்ப்பு ஏற்படும்.
அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் (சுமார் 26) தமிழ்நாட்டில்தான் உள்ளன.
தமிழக அரசு ஆணை அவசரம், அவசியம்!
அதில், மேற்பட்டப் படிப்புக்கான இடங்களும் (P.G. Seats) இரட்டை இலக்கத்தில் உள்ளது நமது தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில்தான். எனவே, இந்த இடங்களை நோகாமல் வந்து பிற மாநிலத்தவர் அபகரித்துக் கொள்ளாமல் தடுக்க இப்படி ஒரு அரசு ஆணை அவசரம், அவசியம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் கல்லூரிக்குரிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அமைச்சரவை உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஜி.ஓ.வாக வெளியிடலாம்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு யார் போட்டாலும்கூட, மகாராஷ்டிர பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ஆன்-லைன் மூலம் போடும் விண்ணப்பம்பற்றிய தீர்ப்பை சுட்டிக்காட்டி, நமது நோக்கம் நிறைவேற்றப்பட வாய்ப்பும்கூட ஏற்படும்.
எனவே, இது அவசரம், அவசியம்!
இவ்வாறு கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)