சென்னை ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாஇன்று (18.7.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக  கலந்துக்கொண்டு உரை  ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “காவல் பணி என்பது மக்கள் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்து வைக்கின்ற மிக உன்னதமான பணி. ஒவ்வொருவரும் பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து, அவர்களுடைய குறைகளை பொறுமையாக கேட்கவேண்டும்.

அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்கவேண்டும். உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதில் நீங்கள் எல்லாம் அப்டேட்-ஆகிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியல் சார்ந்த விசாரணை நடைமுறைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஃபீல்டுக்கு செல்கின்ற இந்த நேரத்தில், எப்படி ஃபிட்டாக இருக்கிறீர்களோ, அதேபோல, நீங்கள் எப்போதும் ஃபிட்டாக இருக்கவேண்டும். பணிச்சுமைகளுக்கு இடையில், நீங்கள் உங்கள் உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளவேண்டும். குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும். 

காவல் துறையில் சிறப்பாக, நேர்மையாக பணியாற்றி, நீங்கள் மேலும், மேலும் பதவி உயர்வுகளைப் பெற்று, மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன். நான் மீண்டும் உங்களை சந்திக்கும்போது, ஃபீல்டுக்குச் செல்லும்போது, நீங்கள் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், சிறப்பாக மக்கள் பணியாற்றுகின்றோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சொன்னால், அதுவே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாகவும், சட்டம், ஒழுங்கு நிலைநாட்டுவதில், மிகுந்த அக்கறையோடும் நீங்கள் அனைவரும் திட்டமிட்டு, திறம்பட செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனப் பேசினார்.