Tailor murdered because he didn't like the tailored pants - shock in Nagercoil

ஆல்டர் செய்து கொடுத்த பேண்ட் சரியாக இல்லை என டெய்லரை நபர் ஒருவர் துணி வெட்டும் கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள திட்டுவிளை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (65) இவர் பெண்களுக்கான பிரத்யேக தையல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடியைச் சேர்ந்த சந்திரமணி என்பவர் அக்கடையில் பேண்ட்டை ஆல்டர் செய்து தைப்பதற்காக துணியை கொடுத்துள்ளார். சந்திரமணி அதே பகுதியில் உள்ள ஹோட்டல் கடை ஒன்றில் சமையலராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

டெய்லர் செல்வம் அரை மணி நேரத்திலேயே பேண்டை ஆல்டர் செய்து தைத்து சந்திரமணியிடம் கொடுத்துள்ளார். அப்போது தைத்தது சரியாக இல்லை என அதிருப்தி தெரிவித்த சந்திரமணி டெய்லர் செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கடையிலிருந்து கத்திரிக்கோலை வைத்து டெய்லர் செல்வத்தை சந்திரமணி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் டெய்லர் செல்வத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் செல்வத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதி பரபரப்பான சாலை என்பதால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து கொலையாளி சந்திரமணியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.