இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் தான் கரோனோவைரஸ் தாக்கம் பரவி வருகிறது. நமது தமிழகத்திலும் இதே நிலைதான்.., இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து மத பிரச்சாரம் செய்வதற்காக 7 பேர் சுற்றுலா விசாவில் சென்ற வாரம் ஈரோடு வந்தனர். இவர்கள் ஈரோட்டின் பல்வேறு மசூதிகளில் மத பிரசங்கம் செய்து வந்தனர். இந்த ஏழு பேரும் இந்த மாதம் 25ஆம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பிரசங்கம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

Advertisment

erode

இந்தநிலையில் இவர்களில் இரண்டு பேர் சொந்த நாடான தாய்லாந்து செல்ல முடிவு செய்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையம் சென்றுள்ளார்கள். விமான நிலையத்தில் நடந்த மருத்துவ பரிசோதனையில் இருவரில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது. அவருக்கு கரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என கருதி கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்த்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவருடன் வந்த மேலும் ஐந்து பேர் ஈரோட்டில் தங்கியுள்ளார்கள் என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

Advertisment

இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து உஷாரான ஈரோடு வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஈரோடு கொல்லம் பாளையம் என்ற பகுதிக்கு சென்று அங்கு தங்கியிருந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரையும் பாதுகாப்பு சாதனங்களுடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.இதை தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் பெருந்துறை ஐஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறதா? என்று ரத்த மாதிரிகள்எடுக்கப்பட்டு அது பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன் முடிவு வரும்வரை அவர்கள் ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தனி வார்டில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்."தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோடு வந்து தங்கிய 5 பேர் தற்போது பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். முடிவு வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவர்களது விசாவை ரத்து செய்து தாய்லாந்துக்கு அனுப்ப தூதரகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்" என்றார் ஈரோடு கலெக்டர் கதிரவன்.