ADVERTISEMENT

உண்மைகளை மறைக்க முடியாது! விஜயபாஸ்கரை குறிப்பிட்டு டி.ஆர்.பாலு பரபரப்பு அறிக்கை!

10:20 AM Apr 16, 2020 | rajavel

ADVERTISEMENT

ஊழல்களை மறைப்பது போல உண்மைகளை மறைக்க முடியாது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குறிப்பிட்டு தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்றில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முதலாவது இடத்தில் இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மக்கள் நலன் காக்கப்பட்டு, நோய்ப் பரவல் தடுக்கப்பட வேண்டும் என்பதால்தான் அனைத்துத் தரப்பினரும் ஊரடங்கு காலத்தை ஏற்றுக்கொண்டு, சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல்கட்சிகளும் தமது விருப்பு -வெறுப்புகளைக் கடந்து மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கரோனா வைரஸ் தொற்று குறித்த முன்னெச்சரிக்கையையும் விழிப்புணர்வையும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முதலில் முன்னெடுத்தது தி.மு.கழகம்தான். கழகத் தலைவர் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேரவையில் இது குறித்துப் பேசினார். அப்போது முதல்வர் அலட்சியமாகப் பதில் அளித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தமிழகம் கரோனா தொற்றுக்கு இலக்கானது. தற்போது 1242 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 உயிர்கள் பலியாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று குறித்து தமிழக அரசின் சார்பில் அறிவிக்கும் நபர்களும் அவர்களின் குரல்களும் மாறினாலும், உண்மை நிலவரத்தை ஒப்புக்கொள்ளவோ, செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதிலளிக்கவோ அவர்களால் இயலவில்லை. அரசைக் காப்பாற்றும் கவனம் மட்டுமே அதில் இருக்கிறது.


ஆரம்பத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து வந்த அமைச்சர் ஏன் ஓரங்கட்டப்பட்டார் என தி.மு.கழகத் தலைவர் அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இந்தியாவிலேயே பொது சுகாதாரத் துறை கட்டமைப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். அது உண்மைதான். 1967 முதல் 2011 வரை தி.மு.கழக ஆட்சி அமைந்த காலகட்டத்தில் எல்லாம் பொது சுகாதாரத்துறை வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. அந்தத் துறையின் கட்டுமானம் சிதைந்து. ‘குட்கா ஊழல்’ போன்ற மோசமான செயல்பாடுகளால் சீரழிய வைத்த பெருமைக்குரியவர் இதே அமைச்சர்தான். அதை இப்போது விரிவாக விவாதிப்பது பொருத்தமானதல்ல.


களத்தில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை அனைவரும் போற்றி வணங்குகிறோம். அவர்களுக்கு வழங்கவேண்டிய பி.பி.இ. கிட்டுகள் உள்பட எந்த வகை பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை என்பதை மருத்துவர்கள் சங்கத்தினரே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்குச் சாப்பாடும் தண்ணீரும் கூட வழங்கவில்லை என, அவல நிலையைக் கடிதமாகவே எழுதி வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில் மாலை நேர அறிவிப்புக் கச்சேரி செய்யும் அமைச்சரும் மற்றவர்களும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் பாதுகாப்பதாக உண்மைக்கு மாறான தகவலையே சொல்லி வருகிறார்கள்.

அதிகாரப்பூர்வக் கணக்கின்படியே 10-க்கும் அதிகமான டாக்டர்கள் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசுக் கணக்கில் வரவு வைக்காத தனியார் மருத்துவமனையில் இரண்டு டாக்டர்களின் உயிர் பறி போயிருக்கிறது. செவிலியர்கள் பலர் நோய்த் தொற்றுக்குள்ளாகியும், போதிய பாதுகாப்பு வசதிகள் கிடைக்காமலும் தங்கள் சேவையைத் தொடர்ந்து வருகின்றனர்.

ரூ.204 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். போதுமான அளவில் கருவிகள் இருப்பதாகத் தெரிவிப்பதும், பிறகு அதிகளவில் கருவிகள் வாங்க முயற்சிகள் நடப்பதாகவும் முதலமைச்சரும் அமைச்சரும் மாறி மாறிச் சொல்லி வருவதில் எது உண்மை என்பதை அவர்களே ஒரு முடிவுக்கு வந்து, முறையாக அறிவித்தால், மக்களின் உயிருடன் விளையாட்டு நடத்தாமல் தவிர்க்கலாம்.


மருத்துவர்களும் செவிலியர்களும் அணிய வேண்டிய என்-95 முகக்கவசம் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது தொடக்கம் முதலே தெரிவிக்கப்படுகிறது. ஆனால், முதலமைச்சரும் அமைச்சரும் இதுகுறித்து மாறுபட்ட கருத்துகளையே தெரிவிக்கின்றனர். விரைவுப் பரிசோதனைக் கருவிகளை சீனாவிலிருந்து வரவழைப்பதிலும் அலட்சியமும் ஆணவமுமான பதில் வெளிப்படுகிறதே தவிர, மக்கள் நலனைக் காக்கும் அக்கறை ஆட்சியாளர்களிடம் வெளிப்படவில்லை.

ஊரடங்குப் பணியில் உள்ள காவல்துறையினர், அன்றாடம் ஊரைச் சுத்தமாக்கிக் காப்பாற்றும் தூய்மைப் பணியாளர்கள், நோய்த்தொற்றால் மரணமடைவோரின் உடல்களை எரிக்கும் மயானப் பணியாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பான உடைகள் - கருவிகள் வழங்கப்படவில்லை என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் தமிழ்நாட்டு மக்கள் கவனித்தே வருகிறார்கள்.


தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கரோனா தொற்றே இல்லை என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதை ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேநேரத்தில், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக் காரணமாக முடக்கப்பட்ட மாவட்டங்களாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை மட்டுமே மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது, மொத்த மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் மட்டுமே கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருக்கிறது என்றால், இதுதான் முன்கூட்டி எடுக்கப்பட்ட - முன்னோடியாகச் செயல்படுவதற்கான அடையாளமா?

தமிழக மக்கள் இந்த அரசை நம்பித்தான் இருக்கிறார்கள். இதைத்தான் தி.மு.கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் எடுத்துரைத்தார்கள். அப்போது நீங்கள் சிரித்தீர்கள். இப்போதாவது உண்மை நிலையை உணருங்கள்.காகிதத்தில் உள்ள புள்ளிவிவரங்களைப் படித்து மக்களைச் சமாதானப்படுத்தி விடலாம் என நினைக்காமல், மக்களின் உயிர் காக்கும் மகத்தான பணியில் இதயசுத்தியோடு ஈடுபடுங்கள். ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னும் தமிழகத்தில் கரோனா உயிரிழப்புகள் இன்று வரை நீடிக்கிறது என்ற கவலையுடன் கடமையாற்றுங்கள்.

உங்களின் உண்மையான - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.கழகம் எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT