ADVERTISEMENT

சாமி சிலைகள் சேதம்; பொதுமக்கள் போராட்டம்       

03:32 PM Oct 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடி கிராமத்தின் எல்லையில் கன்னிமார் கோயில் உள்ளது. இந்தக் கோவில் சாமிகளை சேலம் மாவட்டம் ஊனத்தூர் மற்றும் அப்பகுதியில் உள்ள பல கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இரு வேறு சமூகத்தினருக்கு கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 10 வருடமாக பூசை நடத்தப்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வழிபாடு நடத்திய மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் எட்டாவது நாளான நேற்று ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் கோவிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டியதாக கூறுகின்றனர். அப்போது கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் உடைந்தும் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் அருகே அமர்ந்து மரத்தை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பின்பு இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிலில் வழிபாடு நடத்தும் மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு‌ இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று அமர்ந்திருந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதாக கூறியதையடுத்து கோவில் முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். சின்னசேலம் போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். மரங்களை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT