Sutupavala beads found at porpanaikottai

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் 18.06.2024 அன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அன்று முதல் அரண்மனை திடல் பகுதியில் உள்ள நீர்வாவி குளத்தின் தென்மேற்கு பகுதியில் அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை கண்ணாடி மணிகள் (glass beads), மாவுக்கல் மணிகள் (soap stone beads), பளிங்கு கல் மணிகள் (Crystal beads) உட்பட 519 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு சூதுபவள மணிகளும் அகேட் வகை கல்மணி ஒன்றும் செவ்வந்தி நிற கல் மணி (Amethyst) ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சமூகவலைதளங்களில் படங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சங்ககாலம் என்கிற தொடக்க வரலாற்றுக் கால தொல்லியல் தளங்களான அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், கீழடி, கொற்கை போன்ற இடங்களில் சூதுபவள மணிகளும் அகேட் வகை கல்மணி ஒன்றும் செவ்வந்தி நிற கல் மணி (Amethyst) ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கப் பெற்றுள்ளன.

சூதுபவளம் மற்றும் அகேட் கல்மணிகள் செய்யக்கூடிய மூலக்கற்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் கிடைக்கின்றன. அண்மையில் பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகளும் கண்ணிற்கு மை தீட்டும் அஞ்சணக்கோல் கிடைத்துள்ள நிலையில் இன்று சூதுபவள மணிகளும் அகேட் வகை மணிகளும் கிடைத்துள்ளது சிறப்பாகும்.

Advertisment

இது பொற்பனைக்கோட்டையின் பண்பாட்டுச் செழுமையை உறுதிசெய்கின்றன என்று கூறியுள்ளார். பொற்பனைக்கோட்டை அகழாய்வில் அடுத்தடுத்து ஏராளமான சங்ககால பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்து வருவதால் உற்சாகத்துடன் அகழாய்வுப் பணிகளை செய்து வருகின்றனர். விரைவில் மேலும் கூடுதலான பொருட்கள் கிடைக்கும் என்கின்றனர்.