Skip to main content

"கிராமப் புறங்களில் இயற்கை வளத்தைப் பாதுகாத்தால் நிலையான வாழ்வாதாரத்தை எட்ட முடியும்"-  நபார்டு வங்கி மண்டல முதன்மை மேலாளர் பேச்சு!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

 "Sustainable livelihoods can be achieved by conserving natural resources in rural areas" -   NABARD Bank Regional Chief Manager Talk!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் கிராமங்களில் நீடித்த வாழ்வாதாரம் பற்றிய  இரண்டு நாள் கருத்தரங்கு பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மையத்தின் இயக்குனர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சார் ஆட்சியர் மதுபாலன், பல்கலைக் கழக பதிவாளர் ஞானதேவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் கருத்தரங்கில் நபார்டு வங்கியின் மண்டலப் பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா கலந்து கொண்டு கருத்தரங்கு குறித்த மலரை வெளியிட்டார்.

 

பின்னர் பேசிய நபார்டு வங்கியின் மண்டலப் பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா, "கிராமப் புறங்களில் நல்லதொரு சூழல் நிலவுவதால் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெருக்குவது. மேலும் அங்கேயுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாத்து அவற்றின் பலன்களை அனைவரும் கிடைக்கும்படி செய்தால் கிராமப் புறங்களில் வெகு விரைவில் நிலையான வாழ்வாதாரத்தை நீண்ட காலத்திற்கான வளர்ச்சியையும் வெகு விரைவில் எட்ட முடியும்" எனக் கூறினார்.

 

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக வேளாண் பேராசிரியர் ராஜ்பிரவின், வேளாண்மை வல்லுநர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள், சுய உதவிக்குழு பெண்கள், மாவட்ட அளவிலான ஊரக வளர்ச்சி மற்றும் தூய்மை கிராம ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்றுநர்கள், தோட்டக்கலை உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் சண்முகம், கடலூர் மாவட்ட இயற்கை வேளாண் விவசாயி ரங்கநாயகி, முகையூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளம்பரிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கருத்தரங்கில், அண்ணாமலை பல்கலைக் கழக ஊரக வளர்ச்சி மையம் முகையூர் கிராமத்தைத் தத்தெடுத்து முன்மாதிரி கிராமமாக நிறுவுவதற்கு திட்டங்கள் வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

கருத்தங்கில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள் மற்றும் எண்ணெய்கள், வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டியிருந்தது. இதனை கருத்தரங்கில் கலந்துக் கொண்டவர்கள் அதனை வாங்கிச் சென்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.