Advertisment

போலீசாரின் விசாரணை முடிந்து காரில் புறப்பட்டு சென்றார் சஸ்பெண்ட் ஏ.டி.ஜி.பி. ஜெயராம்! 

Suspended ADGP Jayaram left in his car after the police investigation was over

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமைக் கைது செய்யுங்கள் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமைக் காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி தெரிவித்தார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு ஜெயராம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் தொடர்ந்து 12 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் இந்த விவகாரத்தில் அவருக்கு எவ்வாறு தொடர்பு உள்ளது? பூவை ஜெகன் மூர்த்திக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதா?, ஆள் கடத்தலுக்கு ஏ.டி.ஜி.பி. ஜெயராமனின் கார் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் அப்பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றொரு புறம் பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்காக திருவலங்காடு காவல் நிலையத்திற்கு இன்று (17.06.2025) காலை 09:00 மணிக்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதே சமயம் 12 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் திருத்தணியில் இருந்து ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை திருவலாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. 2 பேரிடமும் தனித்தனியாக இந்த விசாரணை நடைபெற்றது. அதாவது காவல் ஆய்வாளர் அறையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடமும், உதவி ஆய்வாளர் அறையில் ஜெகன்மூர்த்தியிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் இருவரிடமும் டி.எஸ்.பி. தனித்தனியாகக் கேள்விகளை முன்வைத்துப் பதிவு செய்திருந்தார்.

Advertisment

அந்த வகையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணையானது நடத்தப்பட்டது. இத்தகைய சூழலில் தான் காவல்துறையின் வாகனத்திலிருந்த ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் உடைமைகள் அவரது சொந்த வாகனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்திருக்கக்கூடிய நிலையில் இந்த வழக்கு நாளை (18.06.2025) விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் காவல் துறையின் விசாரணை முடிவடைந்து ஜெயராம் அவரது காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறக் கூடிய வழக்கு விசாரணைக்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்வார்கள் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. அதே சமயம் பூவை ஜெகன் மூர்த்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Puratchi Bharatham Poovai Jaganmoorthy police jeyaraman ADGP
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe