
அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.