
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள சக்கராபுரம் ஊரைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் தனக்கு சொந்தமான வீட்டுமனையை அளவு செய்து பட்டா மாற்றம் செய்து தரக்கோரி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் முறைப்படி விண்ணப்பித்திருந்தார். ஆனால், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே செய்யும் அலுவலர்கள் ஜோசப் அளித்த மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். பலமுறை சர்வே செய்யும் ஊழியர்களை நேரில் சென்று கேட்டும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயராக பணிபுரிந்து வரும் அன்புமணியிடம் காலம் தாழ்த்துவது குறித்து ஜோசப் கேட்டுள்ளார். அப்போது சர்வேயர் அன்புமணி, பட்டா செய்து கொடுக்க ரூபாய் 10 ஆயிரம் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோசப் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதனிடம் புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி தேவநாதன், ரசாயனம் தடவிய பணத்தை ஜோசப்பிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்துடன் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சர்வேயர் அன்புமணியை ஜோசப் தேடியுள்ளார். ஆனால், அங்கு அவர் இல்லாததால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு அன்புமணி, செஞ்சியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தியேட்டருக்கு அருகே வரச் சொல்லியிருக்கிறார்.
ஜோசப் இந்தத் தகவலை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் தெரிவித்துவிட்டு, அங்கு சென்று அன்புமணியிடம் ஜோசப் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து கைது செய்துள்ளனர்.