/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dog-che-art_3.jpg)
சென்னை நுங்கம்பாக்கம் மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை வெளியில் சென்றுள்ளார். அதனால் அவரது மனைவி மோனிஷா பூங்காவின் பாதுகாப்பு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது 5 வயது மகள் சுபஷா என்பவரும் இருந்துள்ளார். இந்தச் சிறுமி பூங்காவில் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் இரண்டு வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார்.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைப் புகழேந்தியின் 2 வளர்ப்பு நாய்களும் கடித்து குதறியது. இதனால் சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர். நாய்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் சிறுமியின் மருத்துவ செலவை புகழேந்தி ஏற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-ins-art_33.jpg)
அதே சமயம் வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறுமியைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே சிறுமியைக் கடித்து குதறிய ராட்வைலர் நாய்களை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நாயின் உரிமையாளர் புகழேந்தி இரு நாய்களையும் மதுரையில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நாய்கள் கடித்து பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு இன்று (09.05.2024) பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாகவும், மே 14 ஆம் தேதி வீடு திரும்ப இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் மருத்துவ செலவிற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் முன்பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)