Skip to main content

திமுகவில் மீண்டும் சுரேஷ் ராஜனுக்கு பதவி; ஆதரவாளர்கள் உற்சாகம்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Sureshrajan appointed again in DMK; supporters are excited

 

குமரி திமுகவில் அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் தொடர்ந்து கோலோச்சிக் கொண்டிருந்தவர் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் நெருக்கமாகவும் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த  சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

 

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மகேஷ்க்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி சுரேஷ் ராஜன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி, மகேசை பொறுப்பாளராக்கினார் முதல்வர் ஸ்டாலின். இதனால் சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் ஒவ்வொருத்தரையும் ஓரங் கட்டினார் மகேஷ்.

 

Sureshrajan appointed again in DMK; supporters are excited

 

இதற்கிடையில் ஏற்கனவே சுரேஷ் ராஜனுக்கும் மந்திரி மனோ தங்கராஜுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மனோ தங்கராஜ் மகேஷுடன் சேர்ந்து உட்கட்சி தேர்தலில் பொறுப்பிலிருந்த சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் அந்தப் பொறுப்புகளிலிருந்து தூக்கினார்கள். இதில் ஒரு கட்டத்தில் சுரேஷ் ராஜனிடம் நெருக்கமாக இருந்த பலர் அவரை விட்டுவிட்டு மகேஷ், மனோ தங்கராஜிடம் ஓட்டம் பிடித்தனர்.

 

மேலும் உட்கட்சி தேர்தலில் மா.செ. க்கு போட்டியிடக் கட்சித் தலைமை மகேஷ்க்கு மட்டும்தான் பச்சைக்கொடி காட்டியது. இதனால் கடும் அதிருப்தி ஆனார் சுரேஷ் ராஜன். முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த சுரேஷ் ராஜன் கட்சிக்குச் செய்த தவற்றால் இனி கட்சியில் எந்த பொறுப்பும் அவருக்குக் கிடைக்காது எனப் பரவலாகப் பேச்சும் எழுந்தது. இந்தக் காரணத்தால் தான் முதல்வரே தேதி கொடுத்து முடிவு செய்யப்பட்ட சுரேஷ் ராஜனின் மகனின் திருமணத்துக்குக் கூட முதல்வர் ஸ்டாலின் வரவில்லை என்றனர்.

 

Sureshrajan appointed again in DMK; supporters are excited

 

இந்த நிலையில்தான் சுரேஷ் ராஜனுக்கு கட்சியில் தணிக்கைக்குழு உறுப்பினர் என்ற மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓரங்கட்டப்பட்டிருந்த சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து இன்று (29-ம் தேதி) நாகர்கோவில் வந்த சுரேஷ் ராஜனுக்கு வடசோியில் அவரின் ஆதரவாளர்கள் செண்டை மேளத்துடன் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு திமுக பொறுப்பில் ரீ என்ட்ரி ஆகியிருக்கும் சுரேஷ் ராஜன் மகேசையும் மனோ தங்கராஜையும் சமாளித்து அரசியல் செய்வாரா? அல்லது அவர்களுடன் இணைந்து செயலாற்றுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
The sun can never be hidden Chief Minister M.K. Stalin

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே வேளையில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56 ஆயிரத்து 26 வாக்குகளும், நாதக வேட்பாளர் அபிநயா 10 ஆயிரத்து 479 வாக்குகளும் பெற்றனர். 

The sun can never be hidden Chief Minister M.K. Stalin

இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்குத் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

இந்நிலையில் விக்கரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்றையும் அப்பதிவில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

இடைத்தேர்தல் முடிவுகள்; இந்தியா கூட்டணி அபார வெற்றி!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
by election results India alliance is a huge success

தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. இந்நிலையில் 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.