ADVERTISEMENT

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்...பக்தர்களுக்குத் தடை!

08:30 AM Nov 10, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலின் சூரசம்ஹார விழா நேற்று (09/11/2021) மாலை 04.30 மணிக்கு மேல் 05.30 மணிக்குள்ளாக நடந்தது. கடந்த 4ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. 6வது நாளான நேற்று அதிகாலை 01.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 02.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 09.00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

ADVERTISEMENT

நேற்று மாலை 04.30 மணியளவில் சூரனை வதம் செய்வதற்காக சுவாமி ஜெயந்தி நாதர் ஆலயம் முன்புறமுள்ள கடற்கரையில் எழுந்தருளினார். திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹார வதம் உலகப் பிரசித்தி பெற்றதால் வழக்கம் போன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அதனைக் காணும் வகையில் கடற்கரையில் திரள்வார்கள். ஆனால், இம்முறை கரோனா பரவல் தொற்று காரணமாக விழாவிற்கு பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. விதிப்படி முன்னதாக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டி பக்தர்களின் கூட்டம் வந்திருந்தது. இதற்காக விழா நடக்கிற கடற்கரை பகுதியின் அளவு சுருக்கப்பட்டு தகடுகள் தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டிருந்தது.

மாலை 04.30 மணியளவில் அலங்காரத்துடன் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளினார். பன்முக அவதாரத்துடன் வந்த சூரனை இறுதியில் சம்ஹாரம் செய்து அவனை சேவலாகவும் கொடியாகவும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவின் பொருட்டு வழக்கமாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தடை காரணமாக நிறுத்துப்பட்டன. பக்தர்களைக் கட்டுப்படுத்த போலீசார் பல அடுக்கு பாதுகாப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். முக்கிய அம்சமான இந்த விழாவின் பொருட்டு பாதுகாப்பிற்காக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரின் தலைமையில் சுமார் இரண்டாயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT