ADVERTISEMENT

சிறுவன் கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை குறைப்பு 

05:10 PM Mar 22, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன், மகேஸ்வரி தம்பதியரின் மகன் சுரேஷ்(வயது7). கடந்த 2009ம் ஆண்டு கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது சுரேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தபோது பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். 27.07.2009 அன்று சுரேஷ் பள்ளிக்குச் சென்றுவிட்டு வேனிலிருந்து இறங்கி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவனை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றனர். மகன் வீடு திரும்பாததால் மகேஸ்வரி கம்மாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அன்றைய மறுநாள் மகேஸ்வரியின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர் சுரேஷை கடத்தி வைத்திருப்பதாகவும் அவனை விடுவிக்க வேண்டும் என்றால் 5 லட்சம் தர வேண்டும், போலீசுக்குப் போனால் அவனை உயிரோடு பார்க்க முடியாது என்று மிரட்டினான். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சுரேஷை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து அடிக்கடி மகேஸ்வரியுடன் பேசிய மர்ம நபர் பேசிய தொலைப்பேசிகள், செல்போன் நம்பர்களை வைத்து அந்த நபர் எங்கிருந்து பேசினான் என்பதை போலீசார் கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர். முதலில் திட்டக்குடியில் உள்ள ஒரு காயின்பாக்ஸ் ஃபோனில் இருந்து அந்த நபர் பேசினான். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது அந்த நபர் இருப்பிடத்தை மாற்றி ரூ.5 லட்சத்துடன் பெரம்பலூர் வருமாறு மகேஸ்வரியிடம் கூறினான்.

இதனால் மகேஸ்வரியும் தனிப்படை போலீசாரும் பெரம்பலூர் சென்றனர். ஆனால் கடத்தல்காரனிடமிருந்து வேறு எந்தத் தகவலும் வரவில்லை. அதே நேரத்தில் மகேஸ்வரியின் உறவினரான பாலாயி என்பவரும் சுந்தரராஜன் என்ற அவரது ஆண் நண்பரும் பெரம்பலூரில் சுற்றியபடி மகேஸ்வரியை கண்காணித்தனர். இதைக் கண்டுபிடித்த போலீசார் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது சுரேசை கடத்தி சாக்கு மூட்டையில் கட்டி பெரம்பலூர் அருகே உள்ள குண்டலம் ஏரியில் வீசியதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஏரிக்குள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடந்த மாணவனின் உடலை மீட்டனர். இந்த வழக்கில் கம்மாபுரம் போலீசார், சுந்தரராஜன்(25), பாலாயி(34) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கடந்த 2010 செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று மரண தண்டனை உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த தண்டனை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரராஜன் தனது தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்திருந்தார். இதன் தீர்ப்பு நேற்று வெளியானது அதில், அவர் குற்றம் செய்தபோது அவருக்கு 23 வயது. மற்றும் 2009 முதல் சிறையில் இருக்கிறார். 2013ல் சிறையிலிருந்து தப்பிக்கும் முயற்சியைத் தவிர, அவரது நடத்தை திருப்திகரமாக இருந்தது. இதன் காரணமாக அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனையின் விளிம்பில் இருந்தவருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT