தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல் தொடர்பாகச் சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (10.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதிடுகையில், “இந்த அறிவிப்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில், “வாக்காளர்கள் பட்டியல் கடைசியாகக் கடந்த 2003ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 326இன் படி கட்டாயம் திருத்தம் தேவை” எனச் சுட்டிக்காட்டி மனுதாரர்களின் தரப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் 3 கேள்விகள் எழுப்பினார். அதாவது தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரங்கள் என்ன?. அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன?. நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மிகக் குறுகிய காலகட்டத்தில் இது போன்ற அறிவிப்பை வெளியிடுவதற்குக் காரணம் என்ன? எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.
இது தொடர்பாக ஒரு வாரக் காலத்திற்குள் தலைமைத் தேர்தல் ஆணையம் இதற்கான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். அதற்குப் பதில் மனு 21ஆம் தேதிக்கு முன்னதாக மனுதாரர்கள் தரப்பிடமிருந்து பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கின் விரிவான விசாரணை மேற்கொள்ள வரும் 26ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.