
சவுக்கு சங்கர் தன் மீதான அனைத்து வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், “நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக தரக்குறைவாக பேசி வருகிறார். ஏற்கெனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது, சவுக்கு சங்கர் எந்த வீடியோக்களையும் பதிவிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை அவர் மீறியிருக்கிறார்” என்று வாதிடப்பட்டது.
மேலும், திருச்சி மாநகர காவல் துறையில் பெண் சார்பு ஆய்வாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சவுக்கு சங்கர் மீது திருச்சி மாநகர காவல் துறையில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பெண்களுக்கு எதிரான குற்றம். இந்த வழக்கிற்கும் யூடியூப் காணொளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தை திசை திருப்பும் விதமாக மோசடியான முறையில் அந்த வழக்கிற்கும் தடை வாங்கியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தை எப்படி இவ்வாறு தவறாக வழிநடத்த முடியும்?” என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் தனது மனுதாரர் கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, சவுக்கு சங்கரின் மேல் பதியப்பட்ட அனைத்து வழக்குகளின் மீது பிறப்பிக்கப்பட்ட தடையானது இன்று நீக்கப்படுகிறது. முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது கோயம்புத்தூர் மாநகரில் பதிவான காரணத்தினால் மற்ற மாவட்டம் மாநகரம் அனைத்திலும் பதியப்பட்ட வழக்குகள் கோயம்புத்தூர் மாநகர காவல் துறைக்கு மாற்றப்படுகிறது. அங்கு விசாரணை மேற்கொண்டு அனைத்து வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், பெண் சார்பு ஆய்வாளர் தொடர்பான வழக்கை தனியாக விசாரிக்கவும், இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.