நகராட்சி நிர்வாகத் துறையின் காலி பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சுமார் 2 ஆயிரத்து 569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கான தேர்வும் நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு நேர்காணலும் நடத்தப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத சிவகுமார் உட்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

Advertisment

அப்போது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த பணி நியமனத்தின் மீது தடை விதித்து உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று (04.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த நியமனங்கள் உரிய நடைமுறையின் அடிப்படைகள் பின்பற்றப்பட்டு நடைபெறுகிறது” எனத் தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.