Advertisment

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்! பாமக வலியுறுத்தல்

தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

உச்சநீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும், முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 100 தீர்ப்புகளில் ஒன்று கூட தமிழில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவுரையை ஏற்று, ஆங்கிலம் தெரியாத வழக்குதாரர்கள் தங்களின் வழக்கு குறித்த விவரங்களை தாங்களே படித்து தெரிந்து கொள்ள வசதியாக, ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த மேல்முறையீடுகள் மீதான தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட மாநில மொழியிலும் மொழி பெயர்த்து வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. முதற்கட்டமாக ஆந்திரா, அஸ்ஸாம். சத்தீஸ்கர், தில்லி, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மராட்டியம், ஒதிஷா, திரிபுரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய 12 மாநிலங்களைச் சேர்ந்த 100 வழக்குகளின் தீர்ப்புகள் தெலுங்கு, அஸ்ஸாமி, இந்தி, மராத்தி, ஒரியா, வங்காளம், இந்தி ஆகிய 7 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் சார்பில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்ட செய்தியில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் தவிர இந்தி, கன்னடம், ஒரியா, தெலுங்கு, அஸ்ஸாம் ஆகிய 5 மொழிகளிள் சம்பந்தப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வழக்குகள் மொழியாக்கம் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் தமிழ் இல்லாதது குறித்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப் படவுள்ள முதற்கட்ட மாநில மொழிகள் பட்டியலில் தமிழும் சேர்க்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

Advertisment

supreme-court-delhi

இதனால் தமிழ் மொழியிலும் முதல் கட்டத்திலேயே தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மொழியில் தீர்ப்புகள் வெளியாகாதது மிகவும் வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தால் முதலில் அறிவிக்கப்பட்ட 5 மொழிகள் பட்டியலில் இடம் பெறாத மராட்டியம், வங்காளம் ஆகிய மொழிகளில் கூட தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் குறிப்பாக முதல் கட்டத்திலேயே தமிழ் மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே உறுதியளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதன்படி நடக்காதது தமிழர்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவதென தலைமை நீதிபதி முடிவெடுத்தது உண்மையாகவே புரட்சிகரமான நடவடிக்கை ஆகும். அதற்காக தலைமை நீதிபதியை எவ்வளவு பாராடினாலும் தகும். அதேநேரத்தில் தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதில் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றானதும், உச்சநீதிமன்றத்திற்கு அதிக வழக்குகளை அனுப்பும் மாநிலத்தின் மொழியானதுமான தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். முதல்கட்ட மொழிபெயர்ப்பு தீர்ப்புகளில் தமிழ் இடம் பெறாத நிலையில், தமிழ்நாடு சார்ந்த முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை விரைந்து தமிழில் மொழிபெயர்த்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

judgment Ramadoss Request Supreme Court tamil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe