
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீனுக்கும் அவரது சகோதரர் மகேஷுக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெயக்குமார் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து தனது 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறி மகேஷ் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஜெயக்குமார் மற்றும் நவீன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதனை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விவரங்களை ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஜெயக்குமார் 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.