ADVERTISEMENT

“களங்கத்தைத் துடைத்துத் தூய்மைப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம்” - முத்தரசன் கருத்து

07:16 PM Aug 04, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராகுல் காந்தி மோடி சமூகம் குறித்து அவதூறு பேசியதாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இழந்த தனது எம்.பி பதவியைத் திரும்பப் பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவருக்கு மீண்டும் எம்.பி பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து கூறிய கருத்தை, குஜராத் பாஜகவினர் திரித்து, வழக்காகப் பதிவு செய்து சூரத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 15 ஆயிரம் அபராதமும் விதிக்கும் உத்தரவு பெற்றனர். இந்த அநியாய உத்தரவு வழங்கிய நீதித்துறை நடுவருக்கு பதவி உயர்வு வழங்கி கொண்டாட முனைந்ததை உச்ச நீதிமன்ற தலையீட்டால் தடுக்கப்பட்டது.

கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு கடந்த ஜூலை 7ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்ற கருத்து கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் கோரினார். அவரது முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், "ராகுல் காந்திக்கு விசாரணை நீதிமன்றம் (சூரத் கீழமை நீதிமன்றம்) கடந்த மார்ச் 23 ஆம் தேதி வழங்கிய 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ 15 ஆயிரம் அபராதம் என்ற தண்டனைக்குத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தனி நபரின் உரிமைக்கு மட்டும் பாதகமாக அமையவில்லை. தொகுதி மக்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையினையும் பாதித்துள்ளது" என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் சூரத் கீழமை நீதிமன்றம் தனது அதிகார எல்லை தாண்டி, அதன் எதிர்விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ளாது, ஒரு சார்பு நிலையில் நின்று, யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்ற முனைந்துள்ளது. நீதிமன்ற வரலாற்றில் சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்சநீதிமன்றம் துடைத்துத் தூய்மைப்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்பதுடன் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில், வயநாடு தொகுதி மக்கள் பிரதிநிதியாகச் செயல்படுவதைத் தேர்தல் ஆணையம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT