The Supreme Court is dissatisfied to chennai high court for Doctor Subbiah incident case

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி (04.08.2021) தீர்ப்பளித்தார். அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

Advertisment

The Supreme Court is dissatisfied to chennai high court for Doctor Subbiah incident case

இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (14-11-24) உச்சநீதிமன்றத்தில் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பட்டப்பகலில் ஒரு மருத்துவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அனைத்து விசாரணைகளையும் நடத்திய கீழமை நீதிமன்றம், தகுந்த ஆதாரங்களில் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அனைவருமே விடுதலை செய்தது என்பதை எப்படி நாங்கள் பார்ப்பது என்றே தெரியவில்லை. இது கொடூரமான கொலை வழக்கு என்பதை நாங்கள் தெள்ளத்தெளிவாக பார்க்கின்றோம். ஆனால், குற்றவாளிகளை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று கூறி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.