
அமைச்சர் அன்பில் மகேஷின் புகழுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அண்ணாமலை பொய் தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரும், அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளருமான முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி எஸ்.பி.யிடம் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு: “நான் மேற்கண்ட முகவரியில் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். 18.04.2023 தேதி மதியம் 1.00 மணி அளவில் @mknadvocate என்ற ட்விட்டர் கணக்கை நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது @annamalai_k என்ற ட்விட்டர் கணக்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி அவதூறாகவும், உண்மைக்கு மாறான, பொய்யான, கற்பனை செய்யப்பட்ட படங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடப்பட்டுள்ளதை பார்த்தேன்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டு அதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக வெளியிட்டு இருப்பதை நான் பார்த்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதனால் எனக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் இன்று உங்களிடம் இந்த புகார் மனு கொடுக்கிறேன்.
எனவே, பாரம்பரியமாக பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி பொதுமக்களிடம் பெரும் நன்மதிப்பு நற்பெயர் எடுத்த முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழி ஆகியோரின் குடும்ப கவுரவத்தை கெடுக்கும் எண்ணத்தில் அவர்களின் புகழுக்கு ஊறு விளைவித்து பொய் செய்திகளை வெளியிட்ட BJP தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது சட்டரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்வதுடன் அந்த பொய் செய்தியை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.