/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini-vellore-art.jpg)
சென்னையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் மார்ச் 26 ஆம் தேதி பிரமாண்டமான விழா நடத்துகின்றனர். இதற்காக சென்னையின் 5 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனிடையேபிப்ரவரி 26ஆம் தேதி வாலாஜாவில் ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 200க்கும் அதிகமான மன்றத்தின் மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரஜினிக்கு சென்னையில் நடைபெறும் பாராட்டு விழா பொதுக்கூட்டத்தில் ரசிகர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விழாவை எப்படியெல்லாம் சிறப்பிக்கலாம் என கலந்தாலோசனை நடத்தினர். ரஜினிக்கு நடைபெறும் பாராட்டு விழா நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியாகவும் நடைபெறும் என்கிறார்கள் ரஜினி ரசிகர் மன்றத்தினர். வறுமை நிலையில் உள்ள ரஜினி ரசிகர்கள் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சிகள், பிற நடிகர்கள் ஆச்சரியப்படும் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளனர். இதற்கான வேலைகள் 90 சதவிகிதம் முடிந்த நிலையில் இதுகுறித்து ரஜினிக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அவர் அதனைப் பார்த்தும், கேட்டும் ஆச்சரியமடைந்தவர், மகிழ்ச்சியடைந்து விழாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்வதோடு, திரை பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டைட்டில் வெளியிடும் நிகழ்ச்சியும் சினிமா டைட்டில் வெளியிடுவது போன்று திரை நட்சத்திரங்களை வைத்து வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின்னர், அவரது மன்ற நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளுக்கு சென்றனர். அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் சோர்ந்து போயினர். குறைந்த ரசிகர்களே தலைவர் அரசியலுக்கு வராததே நல்லது என அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு, என்றும் அவரே எங்கள் தலைவர் எனக் கொண்டாடுகின்றனர். அரசியல் முடிவு, ரஜினிக்கும் ரசிகர்களுக்கும் பாலமாக இருந்த மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகர் மறைவு போன்றவற்றால் சோர்ந்து போய் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இந்த பாராட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மீண்டும் புத்துணர்ச்சியை தரும் என்கிறார்கள் மன்ற நிர்வாகிகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)