
வேலூர் குடியாத்தம் அருகே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள மோர்தானா அணை நிரம்பியுள்ளதால் அதிகப்படியான தண்ணீர் கவுண்டியா ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சந்தைப்பேட்டை-கோபாலபுரத்தை இணைக்கும் ஒரு வழி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முக்கிய வழித்தடத்தில் உள்ள பாலம் மூழ்கியதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாற்று வழியாக காமராஜர் பாலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும் கட்டுக்கடங்காத நெரிசல் காமராஜர் பாலத்தையே மூழ்கடித்துள்ளது.